யாழ்ப்பாணம், குறிகட்டுவான், நெடுந்தீவு இடையிலான போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வந்த வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான மூன்று படகுகளும் பழுதடைந்துள்ளதால், நெடுந்தீவு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
நெடுந்தாரகை மற்றும் வடதாரகை ஆகிய படகுகள் ஏற்கனவே பழுதடைந்திருந்த நிலையில், சேவையில் ஈடுபட்டிருந்த குமுதினி படகும் நேற்று மாலை இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்தது.
இதன்போது, பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட 60 பயணிகளை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டு மீண்டும் குறிகட்டுவானுக்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, தனியார் படகுகள் மூலம் பயணிகள் நெடுந்தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இன்றும் அரச உத்தியோகத்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் படகுகளில் பயணிப்பதற்காகக் காத்திருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிகட்டுவானிலிருந்து நெடுந்தீவைச் சென்றடைய சுமார் ஒரு மணித்தியாலம் தேவைப்படும் நிலையில், படகுச் சேவைகளில் ஏற்படும் தடங்கல்கள் அப்பகுதி மக்களின் அன்றாடப் போக்குவரத்தையும் சுற்றுலாத்துறையையும் பாதிப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.











