தமிழ் மக்களது சுபீட்சமான வாழ்வுக்காக தங்களது இன்னுயிர்களை ஈக்கம் செய்த மாவீரர்களை போற்றி வணங்குகின்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் இம்முறையும் நவம்பர் 27ஆம் தேதி தமிழர் தாயகம் எங்கும் தமிழர்கள் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.
அந்த வகையில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்காக தமிழர் தாயக பகுதிகளில் மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி நேற்று (03) மாலை முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு மற்றும் மாவீரர்களுடைய பெற்றோர்கள், பொதுமக்கள் இணைந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்காக அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து சிரமதான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
மேலும் எதிர்வரும் சனிக்கிழமை மாபெரும் சிரமதானப்பணி இடம்பெறவுள்ளதால், நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து உறவுகளையும் கலந்து கொள்ளுமாறு பணிக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.











