வவுனியா, நெடுங்கேணி பெரியமடுப் பகுதியில் இடம்பெற்ற யானை தாக்குதலில் படுகாயமடைந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் நெடுங்கேணிப் பகுதியைச் சேர்ந்த சி.கரன் (வயது 45) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வழக்கம் போல் ஏனையவர்களுடன் இணைந்து அப்பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற போதே எதிர்பாராதவிதமாக ஒற்றை யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவருடன் சென்ற ஏனையவர்களால் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குறித்த பெரியமடு மற்றும் அதனைச் சூழ்ந்துள்ள கிராமப் பகுதிகளில் தொடர்ச்சியாக உலா வரும் ஒரு குறிப்பிட்ட ஒற்றை யானையினாலேயே இவ்வாறான மனித உயிரிழப்புகள் தொடர்வதாகப் பிரதேச பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
கிராமப்புற மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இந்த யானையைக் கட்டுப்படுத்தவும், கிராமவாசிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் வனஜீவராசிகள் திணைக்களமும் உரிய அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











