முதன்மை பழங்குடியின அமைப்புகளான பழங்குடியினரின் சபை (AFN) மற்றும் கியூபெக்-லாப்ரடோர் பழங்குடியினரின் சபை (AFNQL) ஆகியவற்றில் இருந்து விலகுவதற்கு ‘கானாவாகே மொஹாக் சபை’ (MCK) தீர்மானித்துள்ளது.
கனடா மற்றும் கியூபெக் அரசாங்கங்களுடன் நேரடியாக அரசியல் தொடர்புகளைப் பேணும் நோக்கிலேயே கானாவாகே மொஹாக் சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமது சமூகத்தின் சுயாட்சி, சுயாதீன உரிமைகள் மற்றும் இறையாண்மை தொடர்பான நிலைப்பாடுகளை தேசிய மற்றும் பிராந்திய அளவிலான பழங்குடியின அமைப்புகள் சரியாகப் பிரதிபலிக்கவில்லை என்ற நீண்டகால கவலையை நீக்கும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கானாவாகே மொஹாக் சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள கானாவாகேவின் தலைமை அதிகாரி (Grand Chief) கோடி டியாபோ (Cody Diabo), கடந்த பல ஆண்டுகளாகவே இத்தகைய கவலைகள் நிலவி வந்ததாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, பழங்குடியின மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தை (UNDRIP) கனடா நடைமுறைப்படுத்தியபோது, அதன் மூல நோக்கம் கணிசமாக நீர்த்துப்போகச் செய்யப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், பழங்குடியின மக்களுடனான தொடர்புகளுக்கு ‘பழங்குடியினரின் சபையை’ (AFN) மட்டுமே மத்திய அரசாங்கம் முதன்மைத் தளமாகப் பயன்படுத்துவதையும் டியாபோ கடுமையாக விமர்சித்தார்.
மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் ஒவ்வொரு பழங்குடியின சமூகத்துடனும் நேரடியாகவே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.











