மொன்றியல் நகரில் தனது கர்ப்பிணி மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த குற்றத்தை, குற்றவாளியான முஸ்தபா கலீல் மெஷ்கென் என்ற நபர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி அன்று மொன்றியல் நகரின் பொயின்ட்-ஓக்ஸ்-ட்ரெம்பில்ஸ் (Pointe-aux-Trembles) பகுதியில் அமைந்துள்ள தங்களின் வீட்டின் படுக்கையறையில் உறங்கிக்கொண்டிருந்த 10 வாரக் கர்ப்பிணியான நர்ஜஸ் பென் எடர் (Narjes Ben Yedder) என்ற பெண்ணை, அவரது கணவரான முஸ்தபா குத்திக் கொலை செய்தார்.
இக்கொலைக்காக அந்த வீட்டின் சமையலறையிலிருந்து எடுத்து வரப்பட்ட இரண்டு கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மனைவியின் மீது 49 முறை கத்திக் குத்துத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டிருந்ததுடன், அதில் 32 குத்துக்காயங்கள் அவரது வயிற்றுப் பகுதியிலேயே ஏற்படுத்தப்பட்டிருந்தன.
மொன்றியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடங்கவிருந்த நிலையில், தாம் கொலை புரிந்ததை குற்றவாளி முஸ்தபா கலீல் மெஷ்கென் ஒப்புக்கொண்டார்.
கொலையைப் புரிந்த பின்னர், கொலைக் குற்றத்திற்கு நாட்டில் வழங்கப்படும் சிறைத்தண்டனை காலம் எவ்வளவு என்பது குறித்து அவர் இணையத்தில் தேடி ஆராய்ந்துள்ளார்.
அதன் பின்னரே, அவசர அழைப்பு இலக்கம் மூலமாகப் பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்புகொண்டு தாம் தனது மனைவியைக் கொலை செய்துவிட்டதாக முஸ்தபா கலீல் மெஷ்கென் மிகவும் அமைதியான முறையில் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்து சென்று, ரத்தக் கறைகளுடன் காணப்பட்ட முஸ்தபாவை உடனடியாகக் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணையைக் காண்பதற்காகக் கொல்லப்பட்ட பெண்ணின் தாயார் உள்ளிட்ட உறவினர்கள் துனிசியாவிலிருந்து மொன்றியலுக்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.











