மொண்ட்ரியல் நகரின் அஹுன்சிக்-கார்டியர்வில் (Ahuntsic-Cartierville) பகுதியில் இடம்பெற்ற அதிவேக வாகன மோதல் விபத்தில் 18 வயது சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொண்ட்ரியல் காவல்துறை தெரிவித்துள்ளது.
வெளியிடப்பட்ட காவல்துறை அறிக்கையின்படி, குறித்த 17 வயது சிறுவன் அந்தப் பகுதியிலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கியூபெக் மாகாணத்தின் அரச வழக்குத்தொடுநரின் இளையோர் பிரிவினால் அங்கீகரிக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், இளையோர் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
மனிதக்கொலை, மரணத்தை விளைவிக்கும் குற்றவியல் கவனக்குறைவு, மரணத்தை விளைவிக்கும் அபாயகரமான வாகனம் ஓட்டுதல், விபத்து நடந்த இடத்தில் நிற்காமல் தப்பியோடுதல் மற்றும் காவல்துறை அதிகாரியிடமிருந்து தப்பியோடுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
விபத்தில் கொல்லப்பட்ட இளைஞர், கொலுக் அஹுன்சிக் (Collège Ahuntsic) கல்லூரியின் மாணவரான ஐசக் லாரிவீ (Isaac Larivée) என, அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து மொண்ட்ரியல் காவல்துறையினரும், கியூபெக்கின் சுயாதீன விசாரணைக் குழுவான BEI அமைப்பினரும் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.











