மொன்றியல் (Montreal) நகரின் வீதிகளில் கண்காணிப்பை அதிகரிக்கும் நோக்கில், சுமார் 100 புதிய நவீன கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துவதற்கு மொன்றியல் நகரக் காவல் பிரிவு (SPVM) நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் மூலம் மொன்றியல் நகரின் முக்கியப் பகுதிகளில் பொலிஸாரின் கண்காணிப்பு கணிசமாக விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொன்றியல் நகர நிர்வாகம் கொள்முதல் செய்யவுள்ள கேமராக்களில், தொலைவிலிருந்து இயக்கக்கூடிய பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலக்கு வைக்கப்பட்ட வாகனங்களைக் கண்டறியக்கூடிய வாகன இலக்கத்தகடு வாசிக்கும் (Licence-plate reader) கேமராக்களும் அடங்கும்.
அமெரிக்காவின் ‘ஃப்ளோக்’ (Flock) நிறுவனம் தயாரிக்கும் அதிநவீன கண்காணிப்புச் சாதனங்களுக்கு ஒப்பான தொழில்நுட்பத்தைக் கொண்டதாக இவை விவரிக்கப்படுகின்றன.
அமெரிக்காவில் இத்தகைய சாதனங்களைப் பொலிஸார் பயன்படுத்துவதற்குத் தனிநபர் சுதந்திரம் மற்றும் தனியுரிமை ஆர்வலர்கள் (Privacy activists) தொடர்ந்து எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த ஓகஸ்ட் மாதம் மொன்றியல் நகரின் ரிவியர்-டெஸ்-பிரேரிஸ் (Rivière-des-Prairies) பகுதியில் உள்ள ஹென்றி-பூராசா வீதியின் விளக்குக் கம்பமொன்றில் நிறுவப்பட்டிருந்த அதிநவீன கேமராவொன்றை ஊடகவியலாளர் ஒருவர் கண்டறிந்தார்.
இது தொடர்பான செய்தி வெளியானதைத் தொடர்ந்து அந்த கேமரா அங்கிருந்து உடனடியாக அகற்றப்பட்டது.
இத்தகைய நவீன கண்காணிப்புத் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் போதிய வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்றும், மக்களின் தனியுரிமைக்கு இதனால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தனியுரிமை பாதுகாப்பு ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.











