தமிழ்நாடு கோயம்புத்தூர் நகரில் அமைந்துள்ள ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்திற்குப் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்ட செயற்பாட்டில், பல கோடி இந்திய ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் காந்திபுரத்தில் கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் சுமார் 300 கோடி இந்திய ரூபாய் செலவில் கட்டப்பட்ட ‘பெரியார் அறிவுலகம்’ நூலக வளாகம், கடந்த ஒக்டோபர் மாதம் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த நூலகத்திற்காக வாங்கப்பட்ட நூல்களில் போலிப் பெயர்களைக் கொண்டு பல நூறு புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு கோடிக்கணக்கான இந்திய ரூபாய் ஊழல் செய்யப்பட்டுள்ளதாகப் பிரபல தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
‘சிந்தை’ இணையதளத்தில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், நூலகத்தில் விநியோகிப்பதற்காகவே புதிய பதிப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பன்னாட்டுத் தரப் புத்தக எண்கள் (ISBN) மற்றும் நூலாசிரியர் பெயர்கள் அனைத்தும் போலியானவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறைந்த விலை கொண்ட சாதாரணப் புத்தகங்கள் பல மடங்கு கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜோதி சரவணன், ஜோதி ஹரிஹரன், ஜோதிலட்சுமி அன்பழகன், சூர்யா பாலு, திரிஷா விஜய் உள்ளிட்ட பல புனைப்பெயர்களில் நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கீழடி மற்றும் வரலாறு தொடர்பான நூல்களில் இணையத்திலிருந்து எடுக்கப்பட்ட பொருத்தமற்ற படங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பெருமாள் முருகன் வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முறையான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது எனவும், இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் தமிழ்நாடு கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.











