சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க புதிய நிர்வாகக் குழுவை அமைத்துச் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு, இந்திய உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலின் நிர்வாகத்தைப் பொது தீட்சிதர்களிடம் இருந்து கைப்பற்றி, ஓய்வுபெற்ற நீதிபதிகள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட ஐவர் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தீட்சிதர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவானது இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் பஞ்சோலி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் வாதிடுகையில், அரசியலமைப்பின் 26-வது பிரிவின் கீழ் கோயிலை நிர்வகிப்பதற்குத் தங்களுக்கு முழுமையான உரிமை உண்டு என்றும், சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அந்த அடிப்படை உரிமையில் தலையிடுவதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
மேலும், சிதம்பரம் கோயில் நிர்வாகத்தை மாற்றியமைக்கக் கோரி எவரும் வழக்குத் தொடராத நிலையில், நீதிமன்றம் தாமாக முன்வந்து நிர்வாகக் குழுவை அமைத்துள்ளதாகவும் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
அத்துடன், இது தொடர்பாகத் தமிழக அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தமை குறிப்பிடத்தக்கது.











