சீனாவின் ஷென்சென் (Shenzhen) நகரில் நடைபெறும் ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சி மாநாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, சீன ஜனாதிபதி சி ஜின்பிங் புதன்கிழமை விமான நிலையத்தில் நேரில் சென்று வரவேற்றார்.
ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் சி ஜின்பிங் வெளிநாட்டுத் தலைவர் ஒருவரை விமான நிலையத்திற்குச் சென்று வரவேற்பது இதுவே முதல் முறையாகும்.
வியாழக்கிழமை (19.11.2026) நடைபெறவுள்ள முத்தரப்புச் சந்திப்பில் சி ஜின்பிங், டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ள இச்சந்திப்பில் உக்ரைன் போர், ஈரானுடனான அமெரிக்கப் போர், வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் அணு ஆயுதங்கள் குறித்துக் கலந்துரையாடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், ட்ரம்ப் மற்றும் புடின் இடையே தனிப்பட்ட சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளதாக அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, உச்சி மாநாட்டின் தொடக்க உரையாற்றிய சி ஜின்பிங், வர்த்தகப் பாதுகாப்புவாதத்திற்கு எதிராக நிற்பதாகவும், உலக வர்த்தக அமைப்பை மையமாகக் கொண்ட சுதந்திரமான மற்றும் திறந்த வர்த்தகத்திற்கு ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டார்.
சீனா வரிகளைக் குறைத்து தனது சந்தைகளை மேலும் திறக்கும் எனவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், உக்ரைன் போர் தொடர்பாக ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள மேற்கத்திய நாடுகளின் தடைகளைக் கடுமையாக விமர்சித்தார்.
அத்துடன், வரவிருக்கும் முத்தரப்புச் சந்திப்பு மூலம் பெரிய நன்மைகள் கிடைக்கும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் புடின் தெரிவித்தார்.
இதேவேளை, மாநாட்டில் பங்கேற்க வந்த அவுஸ்திரேலியா, கனடா, தென்கொரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட போதிலும், சீனா – ஜப்பான் இடையிலான முரண்பாடுகள் காரணமாக ஜப்பானியப் பிரதமர் சனே தகைச்சிக்கு (Sanae Takaichi) எவ்வித வரவேற்பு நிகழ்வுகளும் நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.











