மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஈரானின் தீவு மீது அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, குவைத் மற்றும் பஹ்ரைன் மீது ஈரான் புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கெஷ்ம் (Qeshm) தீவில் அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பின்னர், பாரசீக வளைகுடா நாடுகள் மீது இந்தத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன.
குவைத்தில் உள்ள அலி அல்-சலம் விமான தளத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களை இலக்கு வைத்துத் தங்களின் ஆளில்லா வானூர்திகள் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், குவைத் நாட்டின் வான் பாதுகாப்புப் பிரிவினர் தமக்கு எதிராக வந்த ஈரானிய ட்ரோன் அச்சுறுத்தல்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு அழித்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் ஸ்திரத்தன்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் இத்தகைய ஆபத்தான தொடர் தாக்குதல்கள் கவலை அளிப்பதாகக் குவைத் வெளியுறவு அமைச்சு வன்மையாகக் கண்டித்துள்ளது.
இதேவேளை, பஹ்ரைன் நாடும் தனது வான் எல்லைக்குள் ஈரானியத் தாக்குதல்களை ஆரம்பத்திலேயே இடைமறித்துத் தகர்த்துள்ளதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, அமெரிக்கப் படைகள் பயன்படுத்திவரும் இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரானியப் புரட்சிகரப் படைகள் தாக்குதல்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் அமைந்துள்ள கெஷ்ம் தீவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள போதிலும், இதனால் கடுமையான சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இந்தப் பரஸ்பரத் தாக்குதல்களால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வருவதுடன், பதற்றத்தைத் தணிப்பதற்கான ராஜதந்திர முயற்சிகளுக்கும் இது சவாலாக அமைந்திருப்பதாகப் பிராந்திய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.











