முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தொட்டியடி பகுதியில் புனரமைக்கப்பட்ட ஏற்றுநீர்ப்பாசனத் திட்டம் இன்று விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளது.
“வளமான நாடு! அழகான வாழ்க்கை!” என்ற திட்டத்தின் கீழ், வடமாகாண சபையின் குறித்தொதுக்கப்பட்ட 92 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்தப் புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று நடைபெற்ற நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் கலந்துகொண்டு, புனரமைக்கப்பட்ட நீர்ப்பாசனத் திட்டத்தை விவசாயிகளின் பயன்பாட்டிற்காக ஆரம்பித்து வைத்தார்.
வடமாகாண பதில் நீர்ப்பாசனப் பணிப்பாளர் சிவபாதசுந்தரம் விகிர்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அரச அதிகாரிகள், நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள், பிரதேச சபைத் தவிசாளர், விவசாயிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இந்தத் திட்டத்தின் மூலம் 293 விவசாயக் குடும்பங்களுக்குச் சொந்தமான 461 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறவுள்ளன.
இதன் ஊடாக விவசாயத்திற்கான நீர் விநியோகம் மேம்படுத்தப்படுவதுடன், அப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.











