திருகோணமலை மாநகர சபையில் இன்று (19.11.2026) நடைபெற்ற அமர்வில், தை மாதத்தை “தமிழ் மரபு மாதமாக” அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இப்பிரேரணை மாநகர சபை உறுப்பினர் உதயகுமார் அஜித் குமார் அவர்களால் முன்மொழியப்பட்டதுடன், கார்மேகம் கமலன் அவர்களால் வழிமொழியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துப் பிரேரணையை நிறைவேற்றினர்.
அத்துடன், ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் தமிழர் பண்பாடு மற்றும் மரபுக் கலைகளை ஊக்குவிக்கும் நோக்கில் மாநகர சபையின் ஏற்பாட்டில் கலைநிகழ்வுகள், போட்டிகள் மற்றும் மரபுசார் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என்பதையும் சபை ஏற்றுக்கொண்டது.
மேலும், தமிழ் மரபு மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, அதனை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் “தமிழ் மரபு பாதுகாப்புக் குழு” ஒன்றைத் திருகோணமலை மாநகர சபையின் கீழ் அமைக்க வேண்டும் என்ற யோசனையையும் உதயகுமார் அஜித் குமார் அவர்கள் முன்வைத்தார்.
இப்பிரேரணையும் மாநகர சபையால் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.
இந்தத் தீர்மானம், திருகோணமலையில் தமிழர் பண்பாட்டு அடையாளம், மரபு மற்றும் பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாத்து மேம்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.











