மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தினால் (MSEDO) வடக்கில் முதல் கட்டமாக 10 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் இரணைதீவில் இன்று புதன்கிழமை(18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இயற்கை வளங்களை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல் மற்றும் எதிர்கால தலை முறைக்கான நிலையான இயற்கைச் சூழலை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன்,மெசிடோ நிறுவனத்தினால் வடமாகாணம் முழுவதும் 10, ஆயிரம் பனை விதைகளை நடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இத் திட்டத்தின் முதற்கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரணைதீவில் இன்று (18) பனை விதைகள் நடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
குறிப்பாக, கடலரிப்பு, வெள்ளப்பெருக்கு மற்றும் நீரோட்டங்களின் தாக்கம் காரணமாக நிலப்பரப்பு பாதிப்புக்குள்ளாகி வருகின்ற இரணைதீவு போன்ற தீவுப் பகுதிகளின் கரையோரங்களை பாதுகாத்தல், மண் அரிப்பை கட்டுப்படுத்துதல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரணைமாதா நகர் மீனவர் சங்கத்தின் பங்கேற்புடன், கடற்கரையோரமாக சுமார் இரண்டரை கிலோ மீற்றர் நீளமான பகுதியில் 600 முதல் ஆயிரம் வரையிலான பனை விதைகள் இன்று (18) நடப்பட்டுள்ளன. இரணைமாதா நகர் பகுதியிலிருந்து இரண்டு படகுகள் மூலம் கடல் வழியாகச் சென்று இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











