ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்த வழக்கில் 8 பேருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வியாழக்கிழமை (19.11.2026) மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரில் 9ஆவது எதிரியை வழக்கிலிருந்து விடுவித்து நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த 2008ஆம் ஆண்டு ஜூன் மாதம் 19ஆம் திகதி தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவர் அப்போதைய ஈ.பி.டி.பி செங்கலடி முகாமில் இருந்தவர்களால் வானில் கடத்திச் செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்டார்.
பின்னர் சடலம் புதைக்கப்பட்டு அதற்கு மேல் வாழைமரம் நாட்டப்பட்டிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸாரால் ஈ.பி.டி.பி-யைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு 2016ஆம் ஆண்டு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வானும் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.
இதன்படி ரவி என அழைக்கப்படும் தர்மலிங்கம் இளமாரன், வீரக்குட்டி சேகர், விஜய் என அழைக்கப்படும் மகேந்திரராஜா வினோராஜ், ஜெக்கா என அழைக்கப்படும் யோகராசா ஜெயக்குமார், சிறி என அழைக்கப்படும் சிறிஸ்கந்தராஜா நாகநாதன், சிவா என அழைக்கப்படும் சொக்கலிங்கம் நாகராசா, அருள் என அழைக்கப்படும் அருணாச்சலம் ராமச்சந்திரன் மற்றும் விஜி என அழைக்கப்படும் கோவிந்தன் பிரதீபன் ஆகிய 8 பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர்.
வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் ஆஜராகியிருந்தனர். சட்டவிரோத கூட்டத்தின் உறுப்பினர்களாக இருந்தமைக்காகத் தண்டனைச் சட்டக்கோவை 140ஆவது பிரிவின் கீழ் 6 மாத கால சாதாரண சிறைத்தண்டனையும், ஆட்கொலை குற்றச்சாட்டுகளுக்காக 296 மற்றும் 206 ஆகிய பிரிவுகளின் கீழ் மரண தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
தீர்ப்பைத் தொடர்ந்து குற்றவாளிகள் 8 பேரும் உடனடியாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.











