திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முந்தைய ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசின் நிலைப்பாட்டினையே, தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசும் எடுத்தது வரவேற்கத்தக்கதாகும் எனத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மகாதீபம், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் ஏற்றப்படாமல், வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகிலுள்ள தீப மண்டபத்திலேயே ஏற்றப்பட்டது.
ஆகம விதிகள் மற்றும் நீண்டகால மரபுகளின் அடிப்படையில் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றக் கோவில் அறங்காவலர் குழு முடிவு செய்ததாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இது குறித்துச் சமூக வலைதளப் பதிவில் கருத்துத் தெரிவித்துள்ள கி.வீரமணி, தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தையும் அமைதியையும் பாதுகாக்கும் நோக்கிலேயே தி.மு.க. மற்றும் த.வெ.க. ஆகிய இரு அரசுகளும் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய தி.மு.க. அரசு மு.க.ஸ்டாலின் தலைமையில் இருந்தபோது, மதக் கலவரம் ஏற்படாத வகையில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
த.வெ.க. அரசு மற்றும் முதலமைச்சரின் செயல்பாடுகளில் கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசின் நிலைப்பாட்டை உறுதியாகப் பின்பற்றியதைப் பாராட்டி வரவேற்பது தமது கடமை எனவும் இது தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால ஆணை குறித்து கடந்த 21.11.2026 அன்று தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்ததாகவும், பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. தவிர ஏனைய கட்சிகள் வழக்கமான இடத்திலேயே தீபம் ஏற்றப்பட வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார்.











