ஞாயிற்றுக்கிழமைகளில் உங்கள் வீட்டில் பலவிதமான அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவீர்களா? இந்த வாரம் உங்கள் வீட்டில் ஸ்பெஷலாக என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிகிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்துள்ளீர்களா?
அப்படியானால் அந்த சிக்கனைக் கொண்டு செட்டிநாடு சிக்கன் மசாலாவை செய்யுங்கள். இந்த சிக்கன் மசாலா செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, சாதம், சப்பாத்தி, பூரி ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும். முக்கியமாக இது 15-20 நிமிடத்தில் செய்யக்கூடிய வகையில் ஈஸியாக இருக்கும். உங்களுக்கு செட்டிநாடு சிக்கன் மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே செட்டிநாடு சிக்கன் மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்: வறுத்து அரைப்பதற்கு…
* எண்ணெய் – 1 டீஸ்பூன்
* சீரகம் – 1 டீஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* மல்லி – 2 டேபிள் ஸ்பூன்
* பட்டை – 1 துண்டு
* மிளகு – 1 டீஸ்பூன்
* அன்னாசிப்பூ – 1
* கல்பாசி – சிறிது
* கிராம்பு – 3
* கசகசா – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 10
* பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி – 4-5
மசாலாவிற்கு…
* நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
* சோம்பு – 1 டீஸ்பூன்
* ஏலக்காய் – 2
* சின்ன வெங்காயம் – 10 (அரைத்தது)
* இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
* தக்காளி – 1
* உப்பு – சுவைக்கேற்ப
* சிக்கன் – 1/2 கிலோ
* தண்ணீர் – தேவையான அளவு
* கொத்தமல்லி – சிறிது
செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, மல்லி, பட்டை, மிளகு, அன்னாசிப்பூ, கல்பாசி, கிராம்பு, கசகசா, வரமிளகாய், பொட்டுக்கடலை, முந்திரி சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக பேஸ்ட் போல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின்பு அதில் அரைத்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து, அத்துடன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் சிக்கனை கழுவி சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து, 10-15 நிமிடம் மிதமான தீயில் வைத்து எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து, சிக்கன் வெந்ததும் கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு சிக்கன் மசாலா தயார்.