தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலம் கிடைக்காத மாநகர சபை, நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட சகல உள்ளூராட்சி சபைகளிலும் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக எதிர்த் தரப்பிலுள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தயாரிப்பதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், அதற்கிடையில் பெயர்ப் பட்டியலை தயாரித்து நிறைவு செய்வதற்கு எதிர்க் கட்சியினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.
இதுதொடர்பான சந்திப்பொன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் (14) இடம்பெற்றுள்ளது.
அந்தப் பேச்சுவார்த்தையின்போது எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய ஆட்சியமைக்கும் உள்ளூராட்சி சபைகளுக் கான பெயர்ப் பட்டியலை தயாரிப்பதற்காக சம்பந்தப்பட்ட கட்சிகளின் பொதுச் செயலாளர்களுடன் நேற்று (15) பேச்சு வார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.
உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களில் இந்த ஒன்றிணைந்த கூட்டத்தை அழைக்கும் பொறுப்பு முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு இதன்போது பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இருக்கும் சகல குழுக்களுடனும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சி அமைப்பதற்கு அப்பால் ஒன்றிணைந்து செயற்படுவதற்கும் இதன்போதே தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நேற்று (15) இடம்பெறவிருந்த கட்சி பொதுச் செயலாளர்களுடனான பேச்சு வார்த்தையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கலந்துகொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும். இதற்கிடையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தேர்தல் தொகுதியை வெற்றிக்கொண்ட உறுப்பினர்களுடனான விசேட பேச்சுவார்த்தையொன்று நேற்று தலைமை அலுவலகத்தில் நாமல் ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பு தொடர்பில் நாமல் எம்.பி. கருத்துத் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு சபைகளிலும் மக்களின் ஆணை எவ்வாறு வெளிப்பட்டிருக்கிறதோ அதற்கு ஏற்பவே செயற்படுவோம். தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை இருக்குமாக இருந்தால் அவர்கள் ஆட்சியமைப்பார்கள்.
எதிர்த் தரப்பினருக்கு பெருபான்மை பலம் இருக்கும் சபைகளில் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் எவ்வாறாக இருந்தாலும் நாங்கள் மக்கள் ஆணைக்கே முதலிடம் கொடுப்போம்.
திரிபுபடுத்தப்பட்ட அரசியல் திட்டத்தில் கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்தி ஸ்திரமற்ற பிரதேச சபை முறையை அறிமுகப்ப டுத்துவதற்கான பொறுப்பை ஜே.வி.பியே ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த முறைக்கமையவே எதிர்க்கட்சியினருக்கும் பெரும்பான்மை பலம் கிடைத்துள்ளது.
இந்த முறைக்கமைய எதிர்க்கட்சிக்கான மக்களின் ஆணையையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கும் நாங்கள் முக்கியத்துவம் வழங்குவோம் என்றார்.