அதிநவீன ரேடார் கட்டமைப்பை கொள்முதல் செய்வதற்காக, அவுஸ்திரேலிய நிறுவனத்துடன் ஒப்பந்தமொன்றை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
இந்த ரேடார் கட்டமைப்பை கொள்முதல் செய்வதற்காக 2.5 பில்லியன் டொலர் நிதியை, மத்திய அரசு செலவு செய்யவுள்ளது.
வட அமெரிக்க வான்வெளிப் பாதுகாப்புப் படையான ‘நோராட்’ (NORAD) அமைப்பை நவீனமயமாக்கி வரும் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான லிபரல் அரசு, அதன் ஒரு பகுதியாகவே இந்த கொள்முதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு அவுஸ்திரேலிய தலைநகர் கான்பெர்ராவில் நடைபெற்றது.
அந்த உத்தியோகபூர்வ நிகழ்வில், கனடாவின் பாதுகாப்புப் பொதுக் கொள்முதல் துறைச் செயலாளர் ஸ்டீபன் ஃபர் (Stephen Fuhr) மற்றும் அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெஸ் (Richard Marles) ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த புதிய திட்டத்தின் மூலம், ஆர்க்டிக் வான்பரப்பில் ஊடுருவ முற்படும் ஏவுகணைகள் மற்றும் எதிரி நாட்டு விமானங்கள் போன்ற அச்சுறுத்தல்களைப் பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு அப்பாலேயே மிகத் துல்லியமாகக் கண்டறிய முடியும் என, கனேடிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.











