மொண்ட்ரியல் நகரில் அமைந்துள்ள, சமகால கலைக்கூடங்களின் மிகப்பெரிய மையமாகத் திகழும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘பெல்கோ’
கட்டடத்தின் புதிய உரிமையாளர்கள் இக்கட்டடத்தின் பாரம்பரியக் கலை அடையாளத்தை அப்படியே பேணப்போவதாக அறிவித்துள்ளனர்.
மொண்ட்ரியல் நகரின் ‘குவார்டியர் டெஸ் ஸ்பெக்டகிள்ஸ்’ பகுதியில், உள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற பெல்கோ கட்டடத்தை, ‘அவெனிர் இம்போபிலியர்’ (Avenir Immobilier) என்ற உள்ளூர் நிறுவனம் வாங்கியுள்ளது. கடந்த 55 வருடங்களாக இக்கட்டடத்தை நிர்வகித்து வந்த துப்ரோவ்ஸ்கி (Dubrovsky) குடும்பத்தினரிடமிருந்து இந்த உத்தியோகபூர்வக் கொள்முதல் இடம்பெற்றுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய சமகால கலைக்கூடங்கள் மற்றும் கலைஞர்களின் பணிமனைகளைக் (Artist studios) கொண்டுள்ள இக்கட்டடம் விற்பனைக்கு வருவதாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட போது, அங்கிருக்கும் 24 கலைக்கூடங்களின் வாடகை கணிசமாக உயர்த்தப்பட்டு தாங்கள் வெளியேற்றப்படலாம் என கலைஞர்கள் மத்தியில் பலத்த அச்சம் நிலவியது.
எனினும், அந்தக் கட்டிடத்தின் புதிய உரிமையாளரான அவெனிர் இம்போபிலியர் நிறுவனத்தின் பங்குதாரர் நிக்கோலஸ் லிசோட் (Nicolas Lizotte) இந்த அச்சம் தேவையற்றது எனக் குறிப்பிட்டுள்ளார். பெல்கோ கட்டடத்தின் பலமே இங்குள்ள கலைச் சமூகத்தின் கூட்டு ஆற்றல்
எனத் தெரிவித்துள்ள அவர், இங்குள்ள வாடகை உயர்வுகள் மிகவும் படிப்படியாகவும், கலைச் சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்காத
வகையிலும், அதன் தனித்துவத்தைப் பேணும் வகையிலுமே அமையும் என்று கூறியுள்ளார்.
சமகால கலைக்கூடங்களின் சங்கத்தின் (AGAC) நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆனி டெஸ்லாரியர்ஸ் (Anie Deslauriers) இந்த முடிவை வரவேற்றுள்ளார். கனடாவின் சமகால கலையை உலகிற்கு வெளிப்படுத்துவதில் பெல்கோ கட்டிடம் ஒரு முக்கிய மையப்புள்ளி என்றும், புதிய உரிமையாளரின் இந்த கலாசார அர்ப்பணிப்பு தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் ஆனி டெஸ்லாரியர்ஸ் (Anie Deslauriers) குறிப்பிட்டுள்ளார்.











