புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பு நிறுவனமான ‘நைகார்ட் இன்டர்நேஷனல்’ (Nygard International) அமைப்பின் நிறுவனரும், முன்னாள் ஆடை வடிவமைப்பு நிபுணருமான பீட்டர் நைகார்ட் (Peter Nygard) மீதான புதிய நீதிமன்ற விசாரணை, மொன்றியல் நீதிமன்றத்தில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.
பாலியல் வன்கொடுமை மற்றும் சட்டவிரோதமாகக் சிறைப்பிடித்தல் முதலான குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
தனது ஆடை வடிவமைப்புத் துறை அதிகாரத்தைப் பயன்படுத்திப் பெண்களையும் இளம் பெண்களையும் ஏமாற்றிப் பாலியல் சுரண்டல்களுக்கு உட்படுத்தியதாக, தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளை, பீட்டர் நைகார்ட் தொடர்ச்சியாக மறுத்து வருகிறார்.
கியூபெக் மாகாண அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் (Quebec prosecutors), கடந்த 2022 ஆம் ஆண்டில் இவருக்கு எதிராக ஒரு பாலியல் வன்கொடுமை மற்றும் ஒரு சட்டவிரோத சிறைப்பிடித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.
இந்தச் சம்பவங்கள் அனைத்தும் 1997 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆம் திகதிக்கும் 1998 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் மொன்றியலில் இடம்பெற்றதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டில், டொராண்டோ நீதிமன்றத்தின் நடுவர் மன்றத்தினால் (Jury) நான்கு பாலியல் வன்கொடுமைக் குற்றச்சாட்டுகளில் பீட்டர் நைகார்ட் குற்றவாளியாகக் கண்டறியப்பட்டார்.
அதனடிப்படையில் அவருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் தற்போது சிறைவாசத்தை அநுபவித்து வருகின்ற நிலையில், மொன்றியல் நகரத்தில் உள்ள நீதிமன்றத்தில், அவருக்கு எதிராக வழக்குகள் பதியப்பட்டிருந்தன.
இந்த நிலையில் மொன்றியலில் தற்போது ஆரம்பமாகியுள்ள இந்த வழக்கிற்கும், ஏற்கனவே டொராண்டோ நீதிமன்றத்தில் இவருக்கு எதிராக நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கும் எவ்வித நேரடித் தொடர்புமில்லை என, நீதிமன்ற வட்டாரங்கள் தெளிவுபடுத்தியுள்ளன.











