கியூபெக் மாகாணத்தின் குடிவரவு, பிரான்சிஸேஷன் மற்றும் ஒருங்கிணைப்புத் துறை அமைச்சரான பிரான்சுவா பொன்னார்டெல் (François Bonnardel), இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என்றும், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு
பெறப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
ஆளும் ‘கோலிஷன் அவெனிர் கியூபெக்’ (CAQ) கட்சியின் மூத்த அமைச்சர்கள் பலர் அடுத்தடுத்து விலகி வரும் நிலையில், இவரது இந்த அறிவிப்பு மாகாண அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது கிரான்பி (Granby) தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் (MNA) அமைச்சராகவும் பதவி வகித்து வரும் பிரான்சுவா பொன்னார்டெல், தற்போதைய சட்டமன்றக் பதவிக்காலம் (Mandate) நிறைவடையும் வரை, தனது மக்கள் பிரதிநிதித்துவப் பணிகளையும், அமைச்சர் பொறுப்பையும் தொடர்ந்து முன்னெடுப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இவரது இந்த அரசியல் ஓய்வு முடிவை கியூபெக்கின் முன்னணி ஊடகங்கள் உறுதி செய்துள்ளன.
பிரான்சுவா பொன்னார்டெல் கியூபெக் மாகாண அரசியலில் நீண்டகால அனுபவமிக்க ஒரு மூத்த அரசியல்வாதியாவார். கடந்த 2007 ஆம் ஆண்டு முதன்முறையாக கியூபெக் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அதன் பின்னர் தொடர்ச்சியாக ஆறு பொதுத் தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்றுத் தனது அரசியல் பலத்தை நிரூபித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.











