கியூபெக்கில் சர்வதேச மாணவர்கள் தங்களின் எதிர்காலம் மற்றும் குடிவரவு அந்தஸ்து (Immigration Status) ஆபத்தில் சிக்கியுள்ளதாகக் கூறி, வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கியூபெக் மாகாணத்தில், நான்கு தனியார் கல்லூரிகளின் செயற்பாட்டு அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்க மறுத்த மாகாண அரசு ரத்து செய்தது.
அதனைத் தொடர்ந்தே, அங்கு கல்வி பயின்று வந்த நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
மொன்றியலில் அமைந்துள்ள ‘கொலேஜ் சுபேரியர் டி மொன்றியல்’ (Collège supérieur de Montréal) கல்லூரிக்கு முன்பாகத் திரண்ட மாணவர்கள், பேரணியாகச் சென்று கியூபெக் மாகாணக் குடிவரவு அமைச்சகத்தின் (Quebec Immigration Ministry) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அனுமதிப்பத்திரம் இடைநிறுத்தப்பட்ட நான்கு தனியார் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களை உடனடியாக வேறு அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளுக்கு மாற்றம் செய்து, தங்களது கல்வியை முழுமையாக்க கியூபெக் அரசு வழிவகை செய்ய வேண்டும் எனப் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பினர்.
கியூபெக்கில் கல்வி பயிலும் சர்வதேச மாணவர்களின் கல்வி அனுமதிப்பத்திரமும் (Study Permit) கியூபெக் ஏற்புச் சான்றிதழும் (CAQ) அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களுடன் நேரடியாகத் தொடர்புபட்ட ஆவணங்கள் ஆகும்.
தற்போது கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், அடுத்த சில வாரங்களிலோ அல்லது மாதங்களிலோ அனுமதிக் காலம் முடிவடையும் நிலையில் உள்ள சர்வதேச மாணவர்களால், அதனைப் புதுப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.











