கியூபெக் மாகாணத்தில் உள்ள ஒகா மாகாணப் பூங்காவில் அமைந்திருக்கும் லேக் ஒஃப் டூ மவுண்டன்ஸ் (Lake of Two Mountains) ஏரியில் மூழ்கி காணாமல்போன இளைஞரைத் தேடும் பணிகள், தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மொன்றியலுக்கு வடமேற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒகா பூங்காவில், இருவர் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அவசர உதவிப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக, அந்த ஏரியில் நீந்தச் சென்றபோது, எதிர்பாராதவிதமாக ஏரியின் ஆழமான பகுதிக்குச் சென்று சிக்கியதாகக் கியூபெக் மாகாண பொலிஸாரின் (Sûreté du Québec – SQ) செய்தித் தொடர்பாளர் எலிசபெத் மார்க்கிஸ் (Elizabeth Marquis) தெரிவித்துள்ளார்.
ஆபத்தான சூழலில் ஏரியில் தவித்துக் கொண்டிருந்த பெண்ணை, அப்பகுதியில் படகில் சென்ற இருவர் கவனித்து உடனடியாக மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். எனினும், அவருடன் சென்ற இளைஞர் நீரினுள்ளே மூழ்கியதாகவும் மீண்டும் மேலே வரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காப்பாற்றப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி அளிப்பதற்காக ஆம்புலன்ஸ் வாகனம் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்ட போதிலும், அவர் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா என்பது குறித்து உடனடியாகத் தெளிவுபடுத்தப்படவில்லை.
ஏரியில் மூழ்கி காணாமல்போன இளைஞரைத் தேடும் பணியில் கியூபெக் மாகாணப் பொலிஸாருடன் (SQ) இணைந்து கனேடியக் கடலோரக் காவல் படை (Canadian Coast Guard) மற்றும் மொன்றியல் பொலிஸார் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
படகுகள் மூலம் நீர்நிலைகளில் தேடுதல் நடத்தப்பட்டு வருவதோடு, பொலிஸ் அதிகாரிகளும் பயிற்சிநிலைப் பொலிஸாரும் ஏரிக் கரையோரப் பகுதிகளிலும் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.











