ஒன்டாரியோவின் வின்ட்சர் (Windsor) நகரையும் அமெரிக்காவின் டெட்ராய்ட் (Detroit) நகரையும் இணைக்கும் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ‘கோர்டி ஹோவ்’ (Gordie Howe) சர்வதேசப் பாலத்தைத் திறப்பது தொடர்பாக அமெரிக்காவுடன் எட்டப்பட்ட சர்ச்சைக்குரிய உடன்படிக்கையின் அதிகாரப்பூர்வ ஆவணப் பிரதியை கனேடிய மத்திய அரசாங்கம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) முன்னர் தெரிவித்த விளக்கங்களுக்கு மாறாக, இந்த உடன்படிக்கை அமைந்துள்ளதாகக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “கொள்கையளவிலான முன்மொழியப்பட்ட ஒப்பந்தம்” (Proposed Agreement in Principle) எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணத்தின்படி, பாலம் திறக்கப்பட்டு முதல் 15 ஆண்டுகளுக்கு, பாலத்தின் மூலம் கிடைக்கும் நிகர வருவாயில் பாதியை அமெரிக்க அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பிராந்திய பொருளாதார மேம்பாட்டு நிதியத்திற்கு கனடா வழங்க வேண்டும்.
கனடா சுமார் $6.4 பில்லியன் கனேடிய டொலர் செலவில் முழுமையாக நிதி வழங்கி இந்தப் பாலத்தைக் கட்டியெழுப்பியது. பாலத்தைக் கட்டுவதற்கு கனடா செய்த முழுச் செலவும் கட்டண வருவாய் (Toll Revenue) மூலம் மீண்டும் ஈட்டப்பட்ட பிறகே, அமெரிக்காவுடன் இலாபம் பகிரப்படும் என பிரதமர் மார்க் கார்னி முன்னர் உறுதியளித்திருந்தார்.
ஆனால், தற்போது வெளியாகியுள்ள ஒப்பந்த உரையில், கனடா வழங்கிய கடன் தொகையைத் திரும்பப் பெறுவது குறித்தோ அல்லது கடன் அடைப்பு குறித்தோ எந்தவொரு இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மாறாக, பாலத்தின் பராமரிப்பு மற்றும் இயக்கச் செலவுகள் கழித்த பின்னரான மொத்த வருவாயில் பாதியை அமெரிக்கா பெற்றுக்கொள்ளும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் பியர் பொய்லீவ்ரே (Pierre Poilievre), “நாட்டின் கடன் தொகை அடைக்கப்பட்ட பின்னரே
வருவாய் பகிரப்படும் எனக்கூறிய பிரதமர் கார்னியின் வாக்குறுதி முற்றிலும் பொய்யாகியுள்ளது” எனச் சாடியுள்ளார்.
இதனிடையே, கனேடியப் பொருட்கள் மீது புதிதாக 50 சதவீத வரியைச் சுமத்தப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் இணைந்து நடத்துவதாக இருந்த பாலத்தின் உத்தியோகபூர்வ எல்லைக் கடப்புத் திறப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
“அமெரிக்காவின் வர்த்தக அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இரு நாடுகளும் இணைந்து ஒரு கொண்டாட்ட நிகழ்வை நடத்துவது பொருத்தமற்றது” என அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், திட்டமிட்டபடி எதிர்வரும் திங்கள்கிழமை முதல், கோர்டி ஹோவ் பாலம் பொதுமக்களின் போக்குவரத்திற்காகத் திறந்துவிடப்படவுள்ளது.











