மொன்றியல் பகுதிக்கு அருகிலுள்ள லோங்வே (Longueuil) மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் இடம்பெற்ற பயங்கரக் கோஷ்டி மோதலில் பலர் காயமடைந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பாக லோங்வே பொலிஸார் (SPAL) தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற இந்த வன்முறைச் சம்பவத்தை அடுத்து, மெட்ரோ நிலைய
வளாகத்தைச் சுற்றிப் பொலிஸார் பலத்த பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், மோதலில் ஈடுபட்டுத் தப்பிச் சென்ற சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான தீவிர நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
லோங்வே – யுனிவர்சிட்டி டி ஷெர்புரூக் (Longueuil-Université-de- Sherbrooke) மெட்ரோ நிலையப் பகுதியில் நள்ளிரவு வேளையில் சில நபர்களுக்கு இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அவ்வாக்குவாதம் கைக்கலப்பாக மாறி, பின்னர் இரு குழுக்களுக்கிடையிலான வன்முறை மோதலாக உருவெடுத்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த லோங்வே நகரப் பொலிஸார் மற்றும் அவசர மருத்துவக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
காயமடைந்தவர்களில் சிலருக்குக் கூர்மையான ஆயுதங்களால் காயங்கள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் மருத்துவ அதிகாரிகளும் பொலிஸாரும் பரிசோதித்து வருகின்றனர்.
சம்பவம் நடைபெற்ற இடத்தை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள பொலிஸார், அப்பகுதியைத் தடயவியல் எல்லைக்
கோடாக (Security Perimeter) அறிவித்து முதற்கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










