இலங்கையில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகின்ற நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் சிறுமி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதன்படி சிறுமியின் கர்ப்பத்தை சட்டவிரோதமாக அழித்த குற்றத்தில் நபரொருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தற்போது பிரான்ஸில் தலைமறைவாகியுள்ள நிலையில், குற்றவாளிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
அத்துடன் தலைமறைவாகவுள்ள குற்றவாளியை கைது செய்ய திறந்த பிடியாணையை மன்று பிறப்பித்துள்ளது.
16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக வாக்குறுதி வழங்கி , பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கிய நபர், சிறுமி 06 மாத கர்ப்பமாக இருக்கும் போது, சிறுமியின் அறிவின்றி , சட்டவிரோத கருக்கலைப்பை மேற்கொண்ட பின்னர் பிரான்ஸ் நாட்டிற்கு தப்பி சென்றுள்ளார்.
சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் குற்றவாளி இன்றி , யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்தது. விசாரணையின் அடிப்படையில் அந்நபரை குற்றவாளியாக கண்ட மன்று 30 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
குற்றவாளி தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிப்பதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, குற்றவாளியை கைது செய்ய திறந்த பிடியாணை பிறப்பித்த மன்று , பிரான்ஸில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களங்களுக்கும் குற்றவாளி தொடர்பில் அறிவிக்குமாறு மன்று கட்டளையிட்டுள்ளது.










