சர்வதேச இணையவழி ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள், கனேடிய உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கு நிதிப் பங்களிப்பை வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கனடாவின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘CRTC’ புதிய வழிகாட்டுதல்களையும் அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது.
கனடாவில் ஆண்டுதோறும் 2.5 கோடி கனடிய டொலர்களுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் வெளிநாட்டு ’இணையவழி ஸ்ட்ரீமிங் நிறுவனங்கள், தங்களது வருவாயில் 5 சதவீதத்தை கனேடிய கலாசார மற்றும் உள்ளூர் படைப்புகளுக்கு வழங்க வேண்டும் என முதற்கட்டமாக உத்தரவிடப்பட்டது.
தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான CRTC-இன் புதிய ஒழுங்குமுறை விதிகள் மற்றும் ஆலோசனைகளின்படி, சேகரிக்கப்படும் இந்த நிதியானது, கனேடிய இசை, திரைப்படம், தொலைக்காட்சி நாடகங்கள் மற்றும் பிரெஞ்சு மொழிப் படைப்பாளர்களின் மேம்பாட்டிற்காக நேரடியாகப் பயன்படுத்தப்படும்.
இதேவேளை, இந்த உத்தரவுக்கு எதிராக வெளிநாட்டு ’இணையவழி ஸ்ட்ரீமிங் நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க ஊடக அமைப்புகள் தங்களது பலத்த எதிர்ப்பைப் பதிவுசெய்துள்ளன.
கனடாவின் இந்த சட்டம் அமெரிக்க-கனடா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தத்திற்கு (USMCA) எதிரானது என்றும், இது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்துவதாகவும் குற்றம் சாட்டி, சில நிறுவனங்கள் கனடிய கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் (Federal Court of Appeal) வழக்கு தொடர்கின்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளன.











