மொன்றியல் பெருநகரப் பகுதியின் பொதுப்போக்குவரத்துத் திட்டமிடல் மற்றும் நிதியளிப்பு முறைகளில் கடும் சீர்கேடுகள் நிலவுவதாக லாவால் (Laval) நகர மேயர் ஸ்டீபன் போயர் (Stéphane Boyer) பகிரங்கக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
மொன்றியால் மெட்ரோ ரயில் பாதையின் ‘ஆரஞ்சு லைன்’ (Orange Line) விரிவாக்கம் தாமதிக்கப்படுவதுடன், பிராந்திய போக்குவரத்து ஆணையமான ARTM-இன் நிதி ஒதுக்கீட்டு முறைகள் புறநகர்ப் பகுதி பயணிகளுக்கு நியாயமற்ற சுமையை ஏற்படுத்துவதாக அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது மொன்றியாலின் கோட்-வெர்ட்டு (Côte-Vertu) நிலையத்திலிருந்து லாவாலின் மொன்மோரன்சி (Montmorency) நிலையம் வரை உள்ள
இடைவெளியை இணைப்பதன் மூலம் ஒட்டுமொத்தப் போக்குவரத்து நெரிசலையும் வெகுவாகக் குறைக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கியூபெக் மாகாண அரசும் ARTM அமைப்பும் பல ஆண்டுகளாக இந்த முக்கியத் திட்டத்தைக் கிடப்பில் போட்டுள்ளமை லாவால் பகுதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என அவர் சாடியுள்ளார்.
தற்போதுள்ள ‘ARTM Zone’ கட்டண அமைப்பின் படி, லாவால் மற்றும் தெற்குப் பகுதிப் பயணிகள் மொன்றியால் தீவுக்குள் நுழைய கூடுதல்
கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனால் புறநகர்ப் பகுதி மக்கள் பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவதை விடுத்து, சொந்த வாகனப் பயன்பாட்டிற்குத் தள்ளப்படுகின்றமை குறிப்பிடத் தக்கது.











