அமெரிக்கா விதித்து வரும் இறக்குமதி வரிகள் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்வதில், கியூபெக்கை ஆளும் ’கொஅலிசியோன் அவனீர் கியூபெக்’ (CAQ) அரசு முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக கியூபெக் லிபரல் கட்சியின் (PLQ) தலைவர் சார்ல்ஸ் மிலியார்ட் (Charles Milliard) சாடியுள்ளார்.
வரவிருக்கும் கியூபெக் மாகாணத் தேர்தலையொட்டி, கியூபெக்கின் பொருளாதார செல்வாக்கை வலுப்படுத்துவதற்கான நான்கு முக்கிய வாக்குறுதிகள் அடங்கிய புதிய பொருளாதாரத் திட்டத்தை சார்ல்ஸ் மிலியார்ட் வெளியிட்டுள்ளார்.
கியூபெக் நகரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, லிபரல் கட்சித் தலைவர் சார்ல்ஸ் மிலியார்ட் தனது பொருளாதார தொலைநோக்கு திட்டத்தை பகிரங்கப்படுத்தினார்.
தற்போதைய பூகோள அரசியல் சூழலில் கியூபெக்கின் பொருளாதாரம் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் கனடாவின் ஏனைய மாகாணங்களுடனான வர்த்தகத் தொடர்புகளிலேயே தங்கியுள்ளது எனத் தெரிவித்த மிலியார்ட், இந்தத் தொடர்புகளின் முழு பலன்களையும் அறுவடை செய்வதற்கு கியூபெக்கின் ஆளும் கட்சி தவறிவிட்டது என்று குற்றம்சாட்டினார்.
அமெரிக்கா விதிக்கும் வரிகளால் கியூபெக்கின் வர்த்தகத் துறை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள நிலையில், தற்போதைய அரசு கியூபெக்கின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதில் அலட்சியமாகச் செயல்படுவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.











