நாட்டின் அவசரச் சிகிச்சைச் சேவை அமைப்பில் ஏற்பட்டுள்ள கடுமையான சீர்குலைவு மற்றும் வேலைப்பளு காரணமாக, நாட்டில் உள்ள அவசரப் பிரிவு மருத்துவர்களில் (Emergency Physicians) 10 பேரில் ஒருவர் தமது சிறப்பு மருத்துவப் பணிகளிலிருந்து முற்றாக வெளியேறியுள்ளதாக, புதிய தேசிய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், எஞ்சியுள்ள மருத்துவர்களில் பெரும்பான்மையானோர் பணிச்சோர்வு (Burnout) காரணமாகத் தங்களது பணி நேரத்தைக் குறைத்துக்
கொண்டுள்ளனர். கனடிய மருத்துவச் சங்க இதழில் (Canadian Medical Association Journal – CMAJ) iன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கை, நாட்டில் சீர்குலைந்துள்ள சுகாதார அமைப்பால் அவசரப் பிரிவு மருத்துவர்கள் தங்களது விரக்தியின் எல்லைக்கே தள்ளப்பட்டுள்ளதை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.
கனடிய அவசரநிலைக்கான ஆராய்ச்சியாளர்கள் வலையமைப்பினால் (Network of Canadian Emergency Researchers) நூற்றுக்கணக்கான அவசரப் பிரிவு மருத்துவர்களிடையே இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக் கட்டுரையின் இணை ஆசிரியரும், கிங்ஸ்டன் ஹெல்த் சயின்சஸ் மையத்தின் அவசரப் பிரிவு மருத்துவருமான மருத்துவர் கெர்ஸ்டின் டி விட் (Kerstin de Wit) கருத்துத் தெரிவிக்கையில், “கனடாவின் சுகாதார அமைப்பு முற்றிலும் முடங்கியுள்ளது என்பதே இந்த ஆய்வின் பிரதான கருப்பொருளாக உருவெடுத்துள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவசரப் பிரிவுகளில் நிலவும் கடுமையான இடநெருக்கடி, படுக்கை பற்றாக்குறை (Bed blocking) மற்றும் போதிய ஊழியர்கள் இல்லாமை
போன்றவை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதோடு, மருத்துவர்களுக்கும் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துவதாக
வென்கூவரைச் சேர்ந்த மருத்துவர் கெய்ட்லின் ஸ்டாக்டன் (Kaitlin Stockton) கவலை வெளியிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.











