மொன்றியல் பகுதியில் பிணை நிபந்தனைகளை மீறிச் சட்டவிரோதமாகத் தப்பியோடிய 65 வயதான பாலியல் குற்றவாளியான மரியோ சாரெட் (Mario Charette) என்பவரைக் கைது செய்வதற்கு, மொன்றியல் பொலிஸார் (SPVM) பொதுமக்களின் அவசர உதவியைக் கோரியுள்ளனர்.
கனடா சிறைச்சாலைச் சேவையினால் (Correctional Service Canada) விதிக்கப்பட்ட கண்காணிப்பு நிபந்தனைகளை அந்தக் பாலியல் குற்றவாளி மீறியுள்ளார்.
அவர், தற்போது கியூபெக் மாகாணம் அல்லது நாட்டின் பிற பகுதிகளில் ஒளிந்திருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
பிரெஞ்சு மொழி பேசும் வெள்ளை இனத்தவரான மரியோ சாரெட், சுமார் 1.65 மீற்றர் உயரமும் 89 கிலோ எடையும் கொண்டவர் என பொலிஸார் விவரித்துள்ளனர்.
நீண்ட குற்றப் பின்னணி கொண்ட மரியோ சாரெட், கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரிவியேர்-ரூஜ் (Rivière-Rouge) பகுதியில் 74 மற்றும் 29 வயதுடைய இரு பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டவர் ஆவார்.
அவரைக் கைது செய்ய உதவும் பயனுள்ள தகவல்களை வழங்குவோருக்கு 5,000 கனேடிய டொலர்கள் வரை சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.










