பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள 10-வது திரைப்படத்திற்கு “டோரதி” எனப் பெயரிடப்பட்டுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ், சனந்த் மற்றும் ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மைப் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம், 2026-ஆம் ஆண்டிற்கான புகழ்பெற்ற டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் ‘சென்டர்பீஸ்’ (Centrepiece) பிரிவில் உலக அளவில் திரையிடப்படுவதற்காக அதிகாரப்பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்பராஜின் தம்மம் ஃபிலிம்ஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் சிக்யா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். தனது நீண்ட நாள் கனவுப் படமான இது, இளையராஜாவின் இசையில் உருவாவது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கார்த்திக் சுப்புராஜ், பல ஆண்டுகளாகத் தாம் உருவாக்க விரும்பிய கதை இப்போது படமாக நிறைவடைந்துள்ளதாகவும், உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி படம் வெளியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும், வழக்கத்தை விட இந்த முறை ‘டோரதி’ திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு சற்று அதிகமாகவே தேவை என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.











