இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே நீடித்து வரும் எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, தூதரக மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து முன்னெடுக்க இரு நாடுகளும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளன. புதுடெல்லியில் நடைபெற்ற எல்லை விவகாரங்கள் குறித்த ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயற்குழுவின் (WMCC) 36-வது கூட்டத்தில் இந்த முக்கியமான முடிவு எட்டப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்த உயர்மட்டக் கூட்டத்தில் எல்லை நிர்ணயம், எல்லைப் பகுதி மேலாண்மை மற்றும் எல்லைத் தாண்டிய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இந்தியத் தரப்பிற்கு இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜித் கோஷ் தலைமை தாங்கினார். அதேபோல, சீனத் தரப்பிற்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் எல்லை மற்றும் கடல்சார் விவகாரங்கள் துறையின் தலைமை இயக்குநர் ஹூ யான்சி தலைமை தாங்கிப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இக்கூட்டத்தில், எல்லை தாண்டிய ஆறுகள் தொடர்பாக இருநாடுகளுக்கு இடையேயான நிபுணர் மட்டக் குழுவின் கூட்டத்தை விரைவில் கூட்ட வேண்டியதன் அவசியத்தை இந்தியா வலியுறுத்தியது. மேலும், எல்லைக் கட்டமைப்பு மற்றும் மேல்நிலைத் திட்டங்கள் தொடர்பான விரிவான தொழில்நுட்ப விவரங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் இந்தியத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக, 35-வது செயற்குழு சந்திப்பு பெய்ஜிங்கில் நடைபெற்றது. அதில் இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. எல்லைப் பகுதிகளில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணுவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு நாடுகளும் தங்களது திருப்தியை வெளிப்படுத்தியிருந்தன. அதன் தொடர்ச்சியாக தற்போது டெல்லியில் நடைபெற்ற சந்திப்பு, இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.











