இந்தியாவில் கடன் வசூல் நடவடிக்கைகளில் வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல், மன உளைச்சல் மற்றும் தேவையற்ற தொல்லைகளை முற்றிலும் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
வங்கி மற்றும் நிதி நிறுவனங்களால் நியமிக்கப்படும் கடன் வசூல் முகவர்கள் (Recovery Agents), கடன் வாங்கியவர்களை மிரட்டுவதோ, அவமதிக்கும் வகையில் பேசுவதோ அல்லது தரக்குறைவான வார்த்தைகளைப் பயன்படுத்துவதோ கூடாது என்று ரிசர்வ் வங்கி கடுமையாக எச்சரித்துள்ளது. முக்கியமாக, அதிகாலை அல்லது இரவு நேரங்களில் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து போனில் அழைத்துத் தொந்தரவு செய்வதற்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வசூல் தொடர்பான அனைத்து தொலைபேசி அழைப்புகளையும் பதிவு செய்வது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடன் வசூலிக்க வரும் முகவர்கள் தங்களது அடையாள அட்டையைத் தெளிவாகக் காண்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் குறிப்பிட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் வாங்கியவரின் தனியுரிமையை மதித்து, முழுமையான தொழில்முறை மரியாதையுடன் மட்டுமே வசூல் நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது. இதுமட்டுமன்றி, கடனுக்காக அடமானம் வைக்கப்பட்ட சொத்துகளைக் கைப்பற்றுவதற்கும் முறையான மற்றும் தெளிவான கட்டுப்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, நிதி நிறுவனங்களின் வசூல் நடைமுறைகளை நெறிப்படுத்தும் இந்த புதிய விதிமுறைகள் 2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வரவுள்ளன.











