தனக்கு என்ன மாதிரியான ஆபத்துகள் அல்லது விளைவுகள் ஏற்பட்டாலும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் தன் மக்களுக்காகவும் மீண்டும் வங்கதேசத்திற்கே திரும்புவேன் என்று அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.
தெற்காசியாவின் வெளிநாட்டு செய்தியாளர் மன்றம் (FCC) ஏற்பாடு செய்திருந்த காணொளி வாயிலாக உரையாற்றிய அவர், “அவர்கள் என்னை சிறையில் அடைக்கலாம் அல்லது கொன்றும் விடலாம். ஆனால், எனது மக்களுடன் வாழ்வதற்காக நான் எனது சொந்த வீட்டிற்குத் திரும்பிச் செல்வேன்” என்று பேசினார்.
வங்கதேசத்தின் தற்போதைய சூழல் மற்றும் தனது முடிவு குறித்து விளக்கிய அவர், “டிசம்பர் மாதம் நமது நாட்டின் வெற்றி மாதம். அதனால் வரும் டிசம்பர் மாதத்திலேயே நான் வங்கதேசத்திற்குத் திரும்ப விரும்புகிறேன். மக்கள் சந்தித்து வரும் கடுமையான துன்பங்களை என்னால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது. எனது இந்த முயற்சி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அல்ல; மாறாக நாட்டை மீண்டும் வளர்ச்சி, மதச்சார்பின்மை மற்றும் செழிப்புக்கான பாதையில் கொண்டு செல்வதற்காகவே” எனத் தெரிவித்தார்.
தனது உரையின் போது, நாட்டின் விடுதலைப் போரின் தியாகிகளுக்கும், தேசத்தந்தை பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட தலைவர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று நடந்த இராணுவப் புரட்சியின்போது படுகொலை செய்யப்பட்ட தனது தந்தையைப் பற்றிப் பேசும்போது அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.
தான் கட்டாயப்படுத்தி நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட போதிலும், தனது நாட்டு மக்களிடமிருந்து ஒருபோதும் மனதால் பிரிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய ஷேக் ஹசீனா, வங்கதேசத்தில் ஜனநாயகம் மீண்டும் மலர்வதற்காக உலக நாடுகள் மற்றும் சர்வதேச சமூகம் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.











