இந்தியாவின் தேசியத் தலைநகரான டெல்லியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜந்தர் மந்தர் போராட்டக் களத்தை ஏன் நிரந்தரமாக மூடக்கூடாது என்றும், அதுகுறித்த நடவடிக்கைகளை மத்திய அரசு ஏன் இன்னும் பரிசீலிக்கவில்லை என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. போராட்டங்கள் என்ற பெயரில் ஒட்டுமொத்த நகரத்தையும் முன்அறிவிப்பின்றி முடக்குவதையோ அல்லது பணயக்கைதியாக மாற்றுவதையோ அனுமதிக்க முடியாது என்று நீதிமன்றம் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லி ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது டெல்லி காவல்துறை விரைந்து முடிவெடுக்க உத்தரவிடக் கோரி, அகில இந்திய தலித் கிறிஸ்தவ உரிமைகள் பாதுகாப்புக் குழு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி அமித் மகாஜன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் கோஸ், காவல்துறை தங்களின் போராட்ட அனுமதி மனுவை நிராகரிக்கவும் செய்யாமல், அனுமதியும் வழங்காமல் நீண்ட நாட்களாகக் கிடப்பில் போட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்த நீதிபதி அமித் மகாஜன், தலைநகரத்திற்குள் இதுபோன்ற போராட்டக் களங்களை ஏன் முழுமையாக மூடிவிடக் கூடாது என்றும், டெல்லிக்குள் இத்தகைய போராட்டங்களை அனுமதிப்பது நகரின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மாவிடம் கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றத்தின் இந்தக் கருத்திற்குப் பதிலளித்த வழக்கறிஞர் சஞ்சய் கோஸ், “டெல்லியில் எந்தவிதமான ஜனநாயகப்பூர்வமான போராட்டங்களும் நடைபெறக்கூடாது என்பதுதான் அரசின் நிலைப்பாடா?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த நீதிபதி, “போராட்டங்களை அனுமதிப்பதற்கான சூழலும் வசதிகளும் நகருக்குள் இல்லை என்றால், அதுகுறித்து முடிவெடுக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்பட்டு ஒட்டுமொத்த நகரமும் முடங்கிக் கிடக்கும்போது, இத்தகைய போராட்டங்கள் ஏன் நகரின் மையப்பகுதியில் நடக்க வேண்டும்?” என்று வினவினார்.
அப்போது கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேத்தன் சர்மா வாதிடுகையில், சுதந்திர தின விழாவான ஆகஸ்ட் 15 நெருங்கி வருவதால் அப்பகுதியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் தடை உத்தரவு அமலில் உள்ளதாகவும், பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஆரம்பத்தில் 75 பேருடன் தொடங்கும் போராட்டம் எப்போது 75,000 பேராக மாறும் என்பதைக் கணிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, மனுதாரரின் போராட்ட அனுமதி கோரிக்கையின் மீது டெல்லி காவல்துறை உடனடியாக முடிவெடுக்க உத்தரவிட்டு, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.











