மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக இரவு பகல் பாராது முன்னெடுக்கப்பட்டு வரும் மின் தடை காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் மக்களின் பிரச்சினை குறித்து மின்சக்தி அமைச்சர் அனுர கருணாதிலகவுக்கு மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் இன்று புதன்கிழமை (5) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
மன்னார் மாவட்டத்தில் அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக மக்கள் பல்வேறு விதமான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.பாடசாலை மாணவர்கள் சிறுவர்கள் முதியவர்கள் என பாதிக்கப்படுவதுடன் பல இலட்சம் பெறுமதியான மின் உபகரணங்கள் செயலிழப்பதுடன் தொழில் முனைவோர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
குறிப்பாக ஆண்டு ஐந்து மற்றும் கா பொ த உயர்தர பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அத்துடன் சட்ட விரோத நடவடிக்கைக்கும் சாதகமாக அமைந்து விடுகிறது.ஒவ்வொரு நாளும் பல தடவைகள் மின் துண்டிப்பு ஏற்படுகிறது.
அரசியல் வாதிகளும் மாவட்ட நிர்வாகமும் உறக்கத்தில் உள்ளனர்.மக்கள் நிலை பற்றி அவர்கள் புரிந்து கொள்வதாக இல்லை. மன்னார் மக்களின் விருப்பமின்றி அதிகார வர்க்கத்தின் அடக்குமுறையால் அமைக்கப்பட்ட 40 காற்றாலைகளில் தினமும் பல மில்லியன் ரூபாவை வருமானமாக பெறுகிறீர்கள்.ஆனால் மன்னார் மக்களை வேண்டுமென்றே வஞ்சிக்கிறது மின்சார சபை.
தடையற்ற மின்சாரம் தருவோம் என உத்தரவாதம் அளித்த அரசாங்கம் மின் தடையை ஏற்படுத்துகிறது. பல அமைச்சர்கள் மன்னாருக்கு வருகை தந்து மக்களுக்கு ஏமாற்று கதைகள் கூறிவிட்டு போகிறார்களே தவிர இந்த மக்களுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை.
வட கிழக்கிற்கு வெளியே இவ்வாறு ஏமாற்று வேலையை மின்சார சபையால் செயல்படுத்த முடியுமா? அரசியல் ரீதியிலும் சரி நிர்வாக ரீதியிலும் எமது மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்.பல மாதங்களாக ஜனநாயக ரீதியாக போராடிய எமது மக்களின் உணர்வுகளை மதிக்காத அரசும் மின்சார சபையும் இப்பொழுது மன்னார் மக்களை தொடர்ந்து வஞ்சிப்பதாகவே நாம் உணர்கிறோம்.
எம்மிடமிருந்து வருமானம் பெறும் தாங்கள் எமது மக்களுக்கு போதிய மின்சார கட்டமைப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் ஆகும்.அந்தப் பொறுப்பில் இருந்து மின்சார சபை விலகுவது வேதனைக்குரிய விடயம் .
ஆகவே உடனடியாக மின் கட்டமைப்புகள் சீர் செய்யப்பட்டு தடையற்ற மின்சாரம் கிடைப்பதற்கு வழி ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லையேல் தினமும் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டும் .இல்லையேல் இழப்பீடு கோரி நீதிமன்றம் நாட வேண்டி வரும்.
தொடர்ந்து மன்னார் மக்களை வஞ்சிப்பது அரசு நிர்வாகத்தின் இயலாமை.
உடனடியாக மின் தடையை நிவர்த்தி செய்ய வழி ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.











