இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சேத் ஜும்மா லால் ருத்தியா என்பவர், முதலாம் உலகப் போரின் போது செலவுகளுக்காகப் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு கடனாக வழங்கிய ரூ.35,000 தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்தக் கோரி அவரது பேரன்கள் இங்கிலாந்து அரசிடம் முறையிட்டுள்ளனர்.
1917-ஆம் ஆண்டு ஜூன் 4-ஆம் தேதி போபாலில் இருந்த பிரிட்டிஷ் அரசியல் முகவரின் கையொப்பத்துடன் வழங்கப்பட்ட இந்தக் கடனுக்கான 109 ஆண்டுகள் பழமையான ஆவணங்கள் மற்றும் கடிதப் பரிமாற்றங்கள் பதிவேடுகளில் கண்டெடுக்கப்பட்டுத் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. போபால் மாநிலத்தின் நிர்வாகத்தைச் சீரமைக்கவும், போர்க் காலத்தில் ராணுவ வீரர்களின் தேவைகளுக்காகவும் பிரிட்டிஷ் பேரரசு இந்த நிதியைப் பெற்றதாக அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செஹோர் நகரைச் சேர்ந்த தொழிலதிபரின் பேரன்களான வினய் ருத்தியா மற்றும் விவேக் ருத்தியா ஆகியோர் தங்களது சட்ட ஆலோசகர் மூலமாக கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்து கடன் மேலாண்மை அலுவலகத்திற்கு (UK Debt Management Office) முறைப்படி சட்டப்பூர்வ அறிவிப்பை அனுப்பினர். 1937-இல் காலமான தங்களது தாத்தா வழங்கிய கடன் தொகையின் தற்போதைய மதிப்பு, ஒரு நூற்றாண்டு கால வட்டியையும் சேர்த்து பல கோடி ரூபாயைத் தாண்டும் என்று சுட்டிக்காட்டிய அவர்கள், சர்வதேச சட்ட விதிகளின்படி ஒரு இறையாண்மை கொண்ட நாடு தனது பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த மனுவைப் பரிசீலித்த இங்கிலாந்து கடன் மேலாண்மை அலுவலகம், அக்கோரிக்கையை ஆய்வு செய்ய அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டு பதிலளித்துள்ளது.
அதில், உரிமை கோரப்படாத பணம் கிடைக்க உரிமை இருப்பதாகக் கருதினால், சொத்துப் பங்கீடு தொடர்பான ஆதாரங்கள், சான்றிதழ்கள் மற்றும் பழமையான கடிதப் போக்குவரத்தின் நகல்களை அரசுப் பத்திரப் பதிவாளரான ‘கம்ப்யூட்டர்ஷேர் இன்வெஸ்டர் சர்வீசஸ்’ (Computershare Investor Services PLC) நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரிட்டிஷ் அரசு அறிவுறுத்தியுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க போர்க்கடனைத் திரும்பக் கேட்கும் இந்தியக் குடும்பத்தின் இந்த முயற்சி சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.











