இலங்கையின் வடக்குப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளில் ஒரு அங்குலத்தை கூட விடுவிக்கப் போவதில்லை என்று,
அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இலங்கையின் பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற விலங்குகள் திருத்தச் சட்டமூலம் மற்றும் தேசிய நீர்வழங்கல் வடிகால் சேவைகள் சபை திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில், கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் இக்கருத்தை வெளியிட்டார்.
போரால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் விவசாய காணிகளை தொடர்ச்சியாக ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு காணி உரிமையாளர்களுக்கு அதன் பயனை வழங்காமல் தடுப்பது முறையற்றது என்று, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
முல்லைத்தீவு, கேப்பாபிளவு,வசாவிலான்,தையிட்டி, ஆகிய பகுதிகளில் தனியார் காணிகளை படையினர் ஆக்கிரமித்து இன்றும் ஆதிக்கம் கொண்டுள்ளார்கள் என்று சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மக்களின் குடியிருப்பு மற்றும் விவசாய காணிகள் 1000 ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
போர் காலத்தில் இனவாத நோக்கத்துடன் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய இலங்கை அரசாங்கம் கொள்கைக்கு முரணாகவே செயற்படுகிறது என, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விமர்சித்துள்ளார்.











