அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகி நடித்துள்ள ‘டி.சி’ (DC) திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையேயும் திரை உலகினரிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக வாமிகா கபி நடித்துள்ளார். மேலும், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் இப்படத்திற்கு ‘ஏ’ (A) சான்றிதழ் வழங்கியுள்ளது.
திரைப்படத்தைப் பார்த்த பிரபலங்கள் பலரும் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வரும் நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் ‘டி.சி’ படம் குறித்து நெகிழ்ச்சியான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “கடலில் சுனாமியாக, காற்றில் சூறாவளியாக, வெயிலில் அக்னியாக, மழையில் இடியுடன் கூடிய அதிரடி அட்டகாசமாகப் படம் அமைந்துள்ளது. ஏற்கனவே வர்த்தக இயக்குநராக வெற்றி கண்ட லோகேஷ் கனகராஜ், விரைவில் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் ‘Action Hero’-வாக வலம் வருவார்” என்று வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
மேலும், படத்தில் புதுமுக நாயகி விரல்களில் பிளாஸ்டிக் ரோஜாவையும் உதடுகளில் நிஜ ரோஜாவையும் சுமந்து காண்போரைக் கவரும் வகையில் நடித்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் தனித்துவமான மேக்கிங் பாணியையும், அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசையையும் புகழ்ந்துள்ள பார்த்திபன், ‘D C R’ என்றால் ‘Daily Collection Reports’ எனப் படத்தின் வசூல் சாதனையையும் சுட்டிக்காட்டித் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.











