கனேடிய இரும்பு (Steel) உற்பத்தியாளர்களுக்காக, 100 மில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான புதிய நிவாரணத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள கடுமையான வரி விதிப்புகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த புதிய நிவாரணத் திட்டம் அமுற்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், நாட்டினுள் இரயில் மற்றும் கடல் வழிகளினூடாக மாகாணங்களுக்கு இடையே கொண்டு செல்லப்படும் இரும்பு உற்பத்திப் பொருட்களுக்கான போக்குவரத்துக் கட்டணத்தில் 50 சதவீதத்தை, மத்திய அரசு மானியமாக வழங்கவுள்ளது.
ஹாமில்டன் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கனேடிய போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon) இப்புதிய ‘சரக்குத் துறை ஆதரவுத் திட்டத்தை‘ (Commodities Sectoral Support Program) உத்தியோகபூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
இப்புதிய நிவாரணத் திட்டம் உடனடியாக அமலுக்கு வரும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒரு வருட காலத்திற்கு அல்லது ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் டாலர் நிதி நிறைவடையும் வரை நடைமுறையில் இருக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.











