அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களுக்கு முன்னால் மத்திய அரசு தொடர்ந்து சரணடைவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவரும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவருமான பியர் பொய்லியேவ்ர் (Pierre Poilievre) தெரிவித்துள்ளார்.
பிரதமர் மார்க் கார்னிக்கு (Mark Carney) அனுப்பியுள்ள கடிதத்திலேயே, அவர் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளார்.
கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தக் கடிதம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமெரிக்காவின் தொடர்ச்சியான வர்த்தகக் கோரிக்கைகளுக்கு பிரதமர் கார்னி தலைமையிலான மத்திய அரசாங்கம் அடிபணிந்து வருவதாகப் பொய்லியேவ்ர் குற்றம் சாட்டியுள்ளார்.
“கனடியத் தொழிலாளர்கள், குடும்பங்கள் மற்றும் நாட்டின் இறைமையின் ஒவ்வொரு அங்குலத்திற்காகவும் போராடும் முதுகெலும்புள்ள ஒரு அரசாங்கமே கனடியர்களுக்குத் தேவை” என்று அவர் தெரிவித்துள்ளார்.











