வெளிநாட்டினர் அமெரிக்காவிற்கு வந்து குழந்தையைப் பெற்றெடுப்பதன் மூலம் அக்குழந்தைக்கு இயல்பாகக் கிடைக்கும் அமெரிக்கக் குடியுரிமையைப் பெறுவதைத் தடுக்கும் பொருட்டு, அமெரிக்க அரசு ‘பிறப்புச் சுற்றுலாவுக்கு’ (Birth Tourism) எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஒரே மாதத்தில் உலகம் முழுவதும் உள்ள வெளிநாட்டினரின் 600-க்கும் மேற்பட்ட விசாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்தப் புதிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டுள்ள ‘பிறப்புச் சுற்றுலா தடுப்புப் பணிக்குழு’ இந்த அதிரடி ஆய்வை மேற்கொண்டு வருகிறது.
அமெரிக்கச் சட்டங்களில் உள்ள இடைவெளிகளைப் பயன்படுத்தி, வெளிநாட்டினர் தங்கள் குழந்தைகளுக்குச் சட்டவிரோதமாகக் குடியுரிமை பெற சில இடைத்தரகு கும்பல்கள் உதவி வருகின்றன. விசா நடைமுற ஏமாற்றுவது, போலி ஆவணங்களைத் தயாரிப்பது மற்றும் பயண ஏற்பாடுகளைச் செய்து தருவது போன்ற தவறான வழிகாட்டல்கள் மூலம் இக்கும்பல்கள் பெரும் லாபம் ஈட்டி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“அமெரிக்கக் குடியுரிமை என்பது விற்பனைக்குரியது அல்ல” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை, நாட்டையும் அதன் சட்ட அமைப்பையும் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை வரும் நாட்களில் மேலும் தீவிரப்படுத்தப்படும் என எச்சரித்துள்ளது.











