அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தில் மிகக் குறைந்த வயதில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளராகப் பொறுப்பேற்றுப் பணியாற்றி வந்த கரோலின் லீவிட், தனது பதவியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.
தனது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் கூடுதல் நேரத்தைச் செலவிடுவதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருந்தாலும், கடுமையான பணிச்சுமை, தூக்கமின்மை மற்றும் அதனால் ஏற்பட்ட தீவிர மன அழுத்தமே இவரின் இந்தத் திடீர் விலகலுக்கு முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது. இரண்டாவது குழந்தை பிறந்த இரண்டே மாதங்களில் மீண்டும் பணிக்குத் திரும்பிய லீவிட், பிரசவ விடுப்பில் இருந்தபோதே பணியிலிருந்து விலகுவது குறித்து ஆலோசித்து வந்துள்ளார்.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அவரைத் தொடர்புகொண்டு கேட்டுக்கொண்டதற்கிணங்க, கடந்த ஜூலை மாதம் அவர் மீண்டும் பணியில் இணைந்தார்.
இருப்பினும், பணிக்கும் குடும்பப் பொறுப்புகளுக்கும் இடையே ஏற்பட்ட தீவிரப் போராட்டத்தைச் சமாளிக்க முடியாமல் இறுதியாக ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். லீவிட் மீது மிகுந்த நம்பிக்கையும் மதிப்பும் வைத்துள்ள அதிபர் டிரம்ப், அவரைத் தடுத்து நிறுத்த முயன்றபோதிலும் அவரது முடிவை மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து லீவிட் விலகினாலும், வரவிருக்கும் இடைத்தேர்தல் பணிகளிலும், குடியரசுக் கட்சியின் வெளியுறவு மற்றும் ஊடகப் பிரிவின் முதன்மை ஆலோசகராகவும் அவர் தொடர்ந்து செயல்படுவார் என்றும் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார்.











