மகாராஷ்டிர மாநிலத்தில் இயங்கும் முச்சக்கர வண்டி மற்றும் டாக்சி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழியில் பேசவும் உரையாடவும் தெரிந்திருப்பது இனி கட்டாயமாக்கப்பட உள்ளது.
இதற்காக 1989-ஆம் ஆண்டின் மகாராஷ்டிர மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களைச் செய்ய மாநில அரசு புதிய வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிராவில் உள்ள ஓட்டுநர்கள் தங்களது பயணிகளுடன் எளிதாக உரையாடி, அவர்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் மாநிலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய விதிகளின்படி, மராத்தி மொழியில் அடிப்படை உரையாடல் அறிவு இல்லாத முச்சக்கர வண்டி அல்லது வாடகை டாக்சி ஓட்டுநர்களுக்கு முதற்கட்டமாக மராத்தி மொழியைக் கற்றுக் கொள்ள ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படும். அந்த அவகாசத்திற்குள் அவர்கள் மொழியைக் கற்கத் தவறினால், அவர்களின் ஓட்டுநர் உரிமம் 3 மாத காலத்திற்கு இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்படும்.
இந்தத் தற்காலிகத் தடை காலத்திற்கு பிறகும் ஓட்டுநர் மராத்தி மொழியைக் கற்க தவறினால், அவரது ஓட்டுநர் உரிமத்தை நிரந்தரமாகவே ரத்து செய்வதற்குச் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆகஸ்ட் 15-க்குப் பிறகு இதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படாது என எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சட்டத் திருத்தமும் கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.











