அமெரிக்காவுடனான மோதல் போக்கை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் பதவிக்காலம் முடிவடையும் 2029ஆம் ஆண்டு வரை போரைத் தொடர்ந்து நீட்டிக்கப் போவதாக ஈரான் புரட்சிகரக் காவல் படை தலைமைத் தளபதியின் மூத்த ஆலோசகர் முகமது ரேசா நக்தி எச்சரித்துள்ளார்.
பிபிஎஸ் ஊடகத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய அவர், எதிர்காலத்தில் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்த எதிரிகள் அஞ்சும் நிலையை உருவாக்குவதே தங்களது முதன்மை இலக்கு என்றும், டிரம்ப் பதவியில் இருக்கும் வரை போரை நீட்டித்து அவர்களுக்குப் பெரும் பொருளாதார மற்றும் ராணுவ இழப்புகளை ஏற்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
மேலும், இந்தப் போரின் மூலம் அமெரிக்க ராணுவத்தின் உண்மையான பலவீனம் வெளிப்பட்டுவிட்டதாகத் தெரிவித்த நக்தி, ஈரானிடம் ஏவுகணை இருப்புப் பற்றாக்குறை ஏற்பட்டாலும் உலகெங்கிலும் உள்ள அமெரிக்காவின் பொருளாதார நலன்களை தங்களால் எளிதில் அழிக்க முடியும் எனக் கூறினார்.
ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவும் பதற்றத்தைக் குறைத்து போரை விரைந்து முடிக்க அமெரிக்கத் தரப்பு முனைப்பு காட்டி வரும் நிலையில், ஈரானின் இந்தத் தீர்க்கமான அறிவிப்பு சர்வதேச அரசியல் அரங்கில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது.











