ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் ஆடவர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் ஹரிஹரனுக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டுத் தெரிவித்ததுடன், அவருக்கு ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
ஜப்பானின் நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, சீன அணியை எதிர்கொண்டது.
இதில் 1-3 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து, அணிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய ஆடவர் அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பேட்மிண்டன் வீரர் ஹரிஹரனுக்கும் தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவரது திறமையைப் பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ‘ELITE Sportsperson Scheme’ திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்று வரும் ஹரிஹரனின் இந்த சாதனை, தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், விளையாட்டு வீரர்களின் கனவுகளுக்குத் தமிழ்நாடு அரசு என்றும் தோள்கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.











