இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படத்தின் டிரெய்லர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றி பெற்ற ‘ஜெயிலர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் இருந்தது.
இந்நிலையில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ‘ஜெயிலர் 2’ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
இப்படத்தில் ரஜினிகாந்த் மீண்டும் தனது புகழ்பெற்ற ‘டைக்கர் முத்துவேல் பாண்டியன்’ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வெளியிடப்பட்டுள்ள டிரெய்லரில், முத்துவேல் பாண்டியன் கார் ஓட்டுநராகத் தனது சாதாரண வாழ்க்கையைத் தொடங்குவது போலவும், பின்னர் ஏற்படும் சூழ்நிலைகளால் மீண்டும் தனது பழைய அதிரடி அவதாரத்திற்குத் திரும்புவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.
மேலும், இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் புதிதாக இணைந்துள்ள அதேவேளை, முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், சிவராஜ்குமார், யோகி பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களில் மீண்டும் தோன்றியுள்ளனர்.
அதிரடி ஆக்ஷன் மற்றும் நெல்சன் பாணி நகைச்சுவை கலந்த இத்திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் 15ஆம் திகதி உலகளாவிய ரீதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.











