மொன்றியல் பொலிஸ் அதிகாரி ஒருவர் மீது கியூபெக் மாகாண அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் (Crown Prosecution Office) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மொன்றியல் நகரில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கைத்தொலைபேசியில் இருந்த காணொளி சான்றை அழித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டே அந்த பொலிஸ் அதிகாரி மீது சுமத்தப்பட்டுள்ளது.
மொன்றியல்-நோர்ட் பகுதியில் அமைந்துள்ள 39 ஆம் இலக்க பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் இனவெறிச் சம்பவங்கள் தொடர்பில் நடைபெற்று வரும் பரந்த விசாரணைகளின் போதே இந்தத் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் மொன்றியல்-நோர்ட் பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து அவசர அழைப்பு வந்ததையடுத்து, ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் இருவர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
அங்கிருந்த பாதிக்கப்பட்ட பெண், தனக்கு இழைக்கப்பட்ட வன்முறை தொடர்பான காணொளி ஆதாரத்தைக் காண்பிப்பதற்காகத் தனது கைத்தொலைபேசியைத் திறந்துள்ளார்.
அப்போது, அந்தக் காணொளியைப் பார்வையிட்ட ஆண் பொலிஸ் அதிகாரி, அதில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரை அடையாளம் கண்டுகொண்டதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக, சக பெண் அதிகாரியின் முன்னிலையிலேயே அந்த முக்கிய காணொளி ஆதாரத்தை அந்த ஆண் பொலிஸ் அதிகாரி கைத்தொலைபேசியில் இருந்து அழித்துள்ளார்.
இது குறித்து அந்தப் பெண் பொலிஸ் அதிகாரி தனது உயர் அதிகாரிகளான இரண்டு சார்ஜன்ட்களிடம் புகாரளித்துள்ளார்.
எனினும், அவர்கள் நடவடிக்கை எடுக்கத் தவறியதால், பெண் அதிகாரி இவ்விவகாரத்தை மொன்றியல் பொலிஸ்துறையின் மேல் மட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.
பொலிஸ் படைக்குள்ளிருந்தே இந்த முறைப்பாடு முதன்முதலில் எழுப்பப்பட்டுள்ளதாக மொன்றியல் பொலிஸ் சேவை (SPVM) உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்வதால், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி பொதுமக்களுடன் தொடர்பில்லாத நிர்வாகப் பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மொன்றியல் பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.











